சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாக காட்சி அளித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம் வேலை செய்யும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் இணைந்து விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பசுமைக் காடுகள் அமைக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு உதவ முன்வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இடத்தைப் பார்வையிட்டு ஊராட்சித் தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் பலமுறை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கிச் சொன்னார்.
அதைத் தொடர்ந்து குறுங்காடுகள் அடர்வனம் அமைக்க அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அமைச்சர் சேகர்பாபு ஆணை வெளியிட்டார். இன்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 7 ஏக்கர் இடத்தில் குறுங்காடுகள் அடர்வனம் அமைக்கும் நிகழ்வு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் கண்ணன், பா.வேல்முருகன், ஆர்.எஸ். இரமேஷ், இல.சுதா பாலசுப்பிரமணியன், முனியசாமி பசும்பொன் மனோகரன், மார நாடு, ஜெயராமன், வி.கே.சுரேஷ், மதிமுக சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகுமார், சிவகாசி மேயர் சங்கீதா, இன்பம் ஒன்றியச் சேர்மன் விவேகன்ராஜ், ஊராட்சி தலைவர் ஏ.எல். நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டக் கழக முன்னணி நிர்வாகிகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக அரங்கில் அமைக்கப்பட்ட திரையில் திரையிடப்பட்டது. துரை வைகோவின் முயற்சிகளையும் பூமித்தாயை காப்பதில் துரை வைகோ கொண்டிருக்கும் அக்கறையையும் துல்லியமாக குறும்படம் எடுத்துரைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமைச்சர்கள் தங்களது பேச்சில் அதனை உள் வாங்கி துரை வைகோவை பாராட்டினர்.