தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சிராப்பள்ளி -- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் புதிய சாலைப் பணி துவக்க விழா மற்றும் சாலையோரங்களில் மரங்கள் நடுதல் பணி துவக்க விழாவில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி மாநகரில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பிறகு திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ உயர்மட்ட மேம்பாலப் பணிகள் துவங்க உள்ள நிலையில் அவற்றை அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்து பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளனர்.
மேலும் சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை முதல் அண்ணா சிலை வழியாக புதிய காவேரிப் பாலம் கட்டுவதற்கான ஆய்வையும் அமைச்சர்கள் மேற்கொண்டனர். அண்ணா சிலை முதல் மல்லாட்சிபுரம் (குடமுருட்டி ) வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் பயணிக்க உயர்மட்ட சாலை அமைத்தல் குறித்த திட்ட விளக்கங்களை விவாதித்துள்ளனர். அதனை தொடர்ந்து தலைமை தபால் நிலையம் முதல் நீதிமன்ற ரவுண்டானா உயர்மட்ட சாலை அமைத்தல் குறித்து ஆய்வு செய்தனர். துவாக்குடி -- பால்பண்ணை சேவை சாலைப் பணி ஆய்வு ஆகியவற்றையும் இன்று ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வுக் கூடங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்ற அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.