மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் பாசனத்திற்காக கல்லணையில் தண்ணீர் மலர்தூவி தண்ணீர் திறந்துவிட்டனர்.
இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை தண்ணீர் பாயும் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி மேற்பனைக்காடு பகுதியில் கல்லணைக் கால்வாயை ஆய்வு செய்தார். இன்னும் சில நாட்களில் தண்ணீர் வந்துவிடும் நிலையில் கால்வாயில் தரைதளம் மற்றும் தடுப்புச்சுவர்கள், பாலங்கள் பணி நடப்பதையும் ஆய்வு செய்தார். மேலும், கல்லணைக்கால்வாயில் தரை தளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தளம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.