சிதம்பரம் அருகே வல்லம்படுகை ஊராட்சிக்குட்பட்ட பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையில் மண்ணரிப்பை தடுக்கும் விதமாக 10 லட்சம் பனை விதை நடும் பணியினை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடுவெளிச்சாவடி, வெள்ளூர், அத்திப்பட்டு, ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலாகக் கட்டிடங்களையும் அதேபோல் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட புடையூர் மற்றும் முடிகண்டநல்லூர் ஊராட்சி செயலக கட்டிடம் உள்ளிட்ட ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், “வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டிவிட்டது. வீராணம் ஏரியிலிருந்து விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரை சிறுக சிறுக வழங்கப்படும். மேலும் மண்ணின் வளத்தைக் காக்க மாவட்டத்தின் நீர்நிலைகள், வாய்கால்கள், ஆறு கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் பனைவிதை நடும் பணி நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” எனக்கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் சரண்யா, நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன், வனத்துறையினர், ஊராக வளர்ச்சி உள்ளாட்சித் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.