தாடிக் கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் காற்றாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. கேள்விப்பட்டவுடன் விரைந்து வந்து பார்வையிட்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதோடு 8.5கோடி மதிப்பில் பாலம் கட்ட உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு ஆத்தூர் தொகுதியில் தொடங்கி வேடசந்தூர் வரை செல்கிறது. தற்போது தொடர்மழை காரணமாக குடகனாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கரை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டி கிராமத்தின் தரைப்பாலம் நேற்று திடீரென துண்டிக்கப்பட்டது. 100 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தென்கரைக்கு வரமுடியாமல் அவதிப்பட்டனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விரைந்து வந்து பாலம் துண்டித்ததைப் பார்வையிட்டதோடு ஆத்துப்பட்டி கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார். உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துப்பட்டியில் பாலம் கட்டுவது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு அதற்கான நிதி 8.5கோடி மதிப்பில் பாலம் கட்ட உத்தரவிட்டார்.
மேலும் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூறிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரையின் மறுபக்கத்திலிருந்த பொதுமக்களிடம் பேசும் போது, “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்துப்பட்டிக்கு நிரந்தர நியாயவிலை கட்டிடம் கட்டிக்கொடுப்பதோடு உடனடியாக ஆத்துப்பட்டியில் நியாயவிலை கடை செயல்படவும் உத்தரவிட்டார்”. ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட திட்ட இயக்குநர் தினேஷ்குமார், கோட்டாட்சியர் காசிசெல்வி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவிபொறியாளர் தமிழ்செல்வன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் தண்டபாணி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, உள்பட அதிகாரிகளும் கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.