உக்ரைனில் ரஷ்ய ராணுவ படையினர் கடந்த 9 நாட்களாக தீவிர வான் தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே தொடர்ந்து போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த இரு தினங்களாக டெல்லியில் இருந்து விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்கு சென்று அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை உக்ரைனில் இருந்து 628 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.
அதில், திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களான 8 பேர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி அழைத்து வரப்பட்டனர். 11.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் திருச்சி மாவட்ட பாஜகவினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.