புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு இன்று மதியம் 1.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னால் சுற்றிவரும் புதுக்கோட்டை மச்சுவாடி, கண்ணன் நகர் 3 வீதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னேஷ்வரன் மற்றும் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கார்த்திகேயன் (23) மற்றும் கறம்பக்கடி தாலுகா நரங்கியபட்டு பிரபாகரன் (33) ஆகிய 3 பேரும் டீன் மீனாட்சி சுந்தரத்திடம் சென்று ஒரு பணி நியமன ஆணையை கொடுத்து கார்த்திகேயனுக்கு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அந்த பணிநியமன ஆணையை வாங்கிப் பார்த்த டீன் அந்த மூன்று பேரையும் அமரச் சொல்லிவிட்டு போலிசாருக்கு தகவல் கொடுத்ததுடன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு ஒரு புகாரும் கொடுத்துள்ளார். அதில் போலியாக எனது கையெழுத்தை போட்டுக் கொண்டு என்னிடமே வந்து வேலைக்காண உத்தரவை கொடுக்கிறார்கள். நான் விசாரித்த வகையில் கார்த்திகேயன் பிரபாகரன் மூலமாக விக்னேஷ்வரன் பழக்கமாகி ரூ. 2 லட்சம் வாங்கிக் கொண்டு விக்னேஷ்வரன் இந்த போலி உத்தரவை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னால் சுற்றி வரும் விக்னேஷ்வரன் அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது செல்போன் உள்பட அனைத்தையும் வைத்துக் கொண்டு அவர் நிழல் போலவே பின்னால் நின்று கொண்டிருப்பவர். மற்றவர்களிடம் தான் அமைச்சர் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு பல்வேறு இடமாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். தற்போது போலியாக டீன் கையெழுத்து போட்டிருப்பது தெரிய வந்ததால் மேலும் விசாரணை செய்தால் பல உத்தரவுகள் வழங்கியதில் சிக்க வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறையில் கூறுகின்றனர்.
மேலும் புதுக்கோட்டைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் முன்னிலையில் சால்வை அணிவித்து அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், ஆளுநர் புதுகை வந்த போது அவரை பார்க்க பலரும் அனுமதிக்கப்படாத நிலையில் அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லி ஆளுநருக்கு மலர் கொத்து கொடுத்தார். இந்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே சுற்றபவர் என்பதால் மாவட்ட ஆட்சியர் கணேஷ் முன்னிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்குளம் அருகே ஆவின் பூத் அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
ஆனால் அமைச்சர் பின்னால் இருக்கும் நபர் என்பதால் அமைச்சரின் பெயருக்கு கலங்கம் எற்படலாம் என்று விசாரனையை இத்துடன் முடித்துக் கொள்ள மேலிடத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அமைச்சர் தரப்பில்.. இந்த விக்னேஷ் அமைச்சரின் உதவியாளர் இல்லை. அதனால் தான் போலிக் கையெழுத்து என்றதும் உடனே அவரை கைது செய்ய போலிசாரிடம் கூறியுள்ளார் அமைச்சர் என்றனர்.
தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி சம்பவம், புதுக்கோட்டை சம்பவம் போல பயங்கர பூதங்கள் கிளம்புவதால் ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.