மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 70 ஆயிரம் பெண்களுக்கு 173 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தேர்தல் வாக்குறுதிகள் அளித்ததில் 75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், அடிமை அரசு என்ற பட்டத்தையும், காலியான கஜானா என்ற அவப்பெயரையும் தான் விட்டு சென்றனர்.
தடுமாறிக் கிடந்த தமிழ்நாடு அரசை தலை நிமிரச் செய்பவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். எல்.ஐ.சி பணம் ஒரே இரவில் காணவில்லை. வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கு இந்த பட்ஜெட்டில் துளி கூட நிதி ஒதுக்கவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கவில்லை. தேர்தலின் போது மட்டுமே அதிமுக மக்களை தேடும்" என்று பேசினார்.