தமிழகத்தில் நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல்வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நீட் தேர்வால் பல அரசு பள்ளி மாணவர்கள் தங்களது மருத்துவர் கனவை மறந்து வேறு படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். சிலர் மருத்துவர் ஆக முடியாது என்பதால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதனைத் தடுக்க கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதனை சில காரணங்களைக் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு அமைந்தது. இதையடுத்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், மசோதாவை 100 நாட்களுக்கு கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் விரிவான விளக்கங்களுடன் அவையின் மறுபரிசீலனைக்காக என்று கூறி மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தார். அதையடுத்து அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மீண்டும் மசோதா அனுப்பப்பட்டு தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கிறது.
இதனிடையே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்று திமுகவின் தலைவர்கள் கூறினர். அத்தோடு, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். இதனை தற்போது சுட்டிக்காட்டிய அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுகதான் ஆட்சிக்கு வந்துவிட்டதே, இப்போதாவது நீட் ரத்து குறித்த ரகசியத்தை வெளியிடும்படி கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து குறித்து அரியலூரில் பேசினார். அதில், “நீட் தேர்வு ரத்து குறித்து ரகசியம் ஒன்றும் இல்லை. தைரியமாக எங்களது கல்வி உரிமை பறிக்கப்படும் போது குரல் கொடுக்கிறோம்; அதுதான் ரகசியம். சமீபத்தில் பிரதமரை சந்தித்த போது எங்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று எனது கோரிக்கை வைத்தேன். பிறகு அவர் பல காரணங்களை என்னிடம் சொன்னார். ஆனால், எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் மனநிலை நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான். அதனால் நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றேன். இதுதான் எங்களுடைய ரகசியம்” என்றார்.