2015ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 29) காலை இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ். சிவ சங்கர், “போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கல் என்பது முற்றிலும் கிடையாது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தனியாருக்கு டெண்டர் விடுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி. அதிமுக ஆட்சி காலத்தில் புதிய பேருந்துகளை வாங்காத காரணத்தினால் பழைய பேருந்துகளை தற்போது இயக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் 7,300 புதிய பேருந்துகள் வாங்க உள்ள நிலையில் தற்போது ஆயிரம் பேருந்துகள் வாங்கி உள்ளதாகவும் ,போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் அதிக அளவில் ஓய்வு பெறுவதால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதற்காகவே தற்காலிகமாக ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இடைப்பட்ட காலத்திற்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிய பின்பு தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்படுவார்கள். அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுகிறது.
போக்குவரத்து தனியார் மயமாக்கல் என ஒரு மாதத்திற்கு முன்பே எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை விடுத்தனர். தற்பொழுது ஒரு மாதம் தூங்கி எழுந்து சீமான் அதே கருத்தை தெரிவிக்கிறார். சீமானுக்கு இலங்கை பிரச்சனையும், ஈழத்தமிழர் பிரச்சனை மட்டும்தான் தெரியும். அரசியல் காரணத்திற்காக இது போன்று கூறி வருகின்றனர். எது சொன்னாலும் அதனைத் தெரிந்து கொள்வது சீமானுக்கு நல்லது" என்றார்.