தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியைத் தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, இன்றும், நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1,200 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்ததால், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், தொடர் விடுமுறையொட்டி, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணங்களை பயணிகளிடம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. புகாரைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தனியார் பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்ததுடன், பயணிகளிடம் கட்டண விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வாங்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலித்தப் பேருந்துகளில் கூடுதல் தொகையைப் பயணிகளிடம் திரும்ப தர வைத்துள்ளோம். டீசல் விலையை ஒன்றிய அரசு தினமும் அதிகரித்து வருவதால், இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.