மது விலக்கை கொண்டு வருவதாகவோ மதுக் கடைகளைக் குறைப்பதாகவோ திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வஉசி பூங்கா பகுதியில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மது விலக்கை கொண்டு வருவதாகவோ மதுக் கடைகளை குறைப்பதாகவோ திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை. ஏதோ திமுக ஆட்சியில்தான் மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டதாக சிலர் சித்தரிக்கின்றனர். அது முற்றிலும் தவறு. எங்களது ஆட்சி வந்த பிறகு பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தளங்கள் அருகே இருந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடை செயல்படும் நேரத்தை குறைக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. அருகாமையில் உள்ள பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா நேரத்தை குறைக்கவில்லை. கொரோனா காலத்தில் கூட பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் வழக்கமாக செயல்பட்டன.
டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூபாய் 10, 20 என அதிக விலை வைத்திருக்கின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். மூன்று மாதத்திற்கு முன்பே விசைத்தறியாளர்களுக்கு யூனிட் 750லிருந்து 1000 யூனிட் கைத்தறி நெசவாளர்களுக்கு 200லிருந்து 300 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அச்சலுகையை வழங்க தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு வாக்குறுதி நிறைவேற்றப்படும்.
சுமார் 30 சதவீதத்திற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்துக்கு வழங்கும் மானியத்தை முதல்வர் ரூபாய் 9000 கோடியிலிருந்து 13000 கோடியாக உயர்த்தி உள்ளார். 2.67 கோடி மின் நுகர்வோரில் 2.60 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28 கடைசி நாளாகும். அதற்குப் பிறகு நீட்டிக்கப்படாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் 110 இடங்களில் திமுக தேர்தல் பணிமனை அமைத்துள்ளோம். மக்கள் தாங்களாகவே பணிமனைக்கு வருகின்றனர். இதில் எந்த விதி மீறலும் இல்லை” எனக் கூறினார்.