புதிய கல்விக்கொள்கை தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தனது கோரிக்கை மனுவை வழங்கினார் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் கவுதமன்.
பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’நீட்டைவிட ஆயிரம் மடங்கு எமனாக உள்ளது இந்த புதிய கல்வி கொள்கை. மிகப்பெரிய மாற்றமாக இன்றைக்கு இருக்கின்ற 10, +2 என்கிற பள்ளிக் கல்வி முறையினை மாற்றி 5 + 3 + 3 + 4 என்கிற ஆபத்தான புதிய பள்ளிக் கல்வி முறையை அறிமுகப்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி 3 வயது முதல் 18 வயது வரை 15 ஆண்டு கால பள்ளிக்கல்வியை இக்கொள்கை வரைவு முன்வைக்கிறது.
பள்ளிக்கல்வியில் கற்றலுக்கான சமவாய்ப்பு ஏற்படுத்தாமல் இந்த மாற்றம் பயன் தராது. குழந்தைகள் தாங்களாகவே பள்ளிக்கல்வி முறையை விட்டு வெளியேற வழி செய்யும். அதே போல மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு என்பதே குழந்தைகள் மனதில் அச்சத்தை உண்டாக்கும். அதற்கு மாற்றாகத்தான் எட்டாம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழு மதிப்பீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் கற்றல் திறன் குறைபாடு எனக் கண்டறிந்து அக்குழந்தையை அதே வகுப்பில் மீண்டும் படிக்கச் செய்தால், அத்தகைய அணுகுமுறை குழந்தை மனதில் பல பாதிப்புகளை உண்டாக்கும்.
அது மட்டுமில்லாமல் சமஸ்கிருதம் கற்றலுக்கு கூடுதல் முக்கியத்துவம். பிற இந்திய மொழி வளச்சிக்கு சமவாய்ப்பு கிடையாது. மேலும் ஆறரை கோடி தன்னார்வலர்கள் என்கிற பெயரில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த தொண்டர்கள் மட்டும் பள்ளிக்குள் நுழைவர்.
ஒரு மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பிறமொழிகளை இரண்டாம் தர மொழிகளாக கருதுவது இந்திய மொழிகளை சமமாக பார்க்காமல் ஒற்றை மொழியின் கீழ் பண்பாட்டை சுருக்கவும், தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளை அழிக்கும் சூழ்ச்சியே ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள மாநில அரசு உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கல்வி முழுமையாக செல்லும். பிரதமர் தலைமையில் அமைந்த தேசிய கல்வி ஆணையமே முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக இருக்கும்.
கூட்டாட்சி தத்துவம், சமூக நீதி, மக்களாட்சி மாண்புகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் ஆகியவற்றிற்கு எதிரான இக்கல்விக் கொள்கை வரைவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்கிற கல்வியாளர்களின் கருத்தையே தமிழ்ப் பேரரசு கட்சியும் தமிழக அரசிடம் முன்வைத்தோம்’’ என்றார்.