குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா அடுத்த மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்க இருக்கிறது. இதில் கேரளா மற்றும் குமாரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்படுவது வழக்கம். 85 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டில் இந்துக்கள் அல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகா்கள் யாரும் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு சமய மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துவதாகக் கூறி அழைப்பிதழும் அடித்து வெளியிடப்பட்டது. இதற்கு ஹைந்தவ சேவா சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகளும் ஹைந்தவ சேவா சங்கத்துக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இது இந்து மத நம்பிக்கை இல்லாதவா்களை சமய மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க அமைச்சா் மனோ தங்கராஜின் திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில், மண்டைக்காட்டுக்கு வந்த அமைச்சா் சேகா்பாபு சமய மாநாடு நடக்கும் இடத்தைப் பார்வையிட்டதுடன், தொடா்ந்து நாகா்கோவில் விருந்தினா் மாளிகையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வழக்கம் போல் ஹைந்தவ சேவா சங்கம் சமய மாநாட்டை நடத்துவது என்றும், அதில் இந்து ஆன்மீக சொற்பொழிவாளா்களைக் கலந்துகொள்ள வைப்பது என்றும், மேலும் அதில் கலந்து கொள்பவா்களில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி நடத்துவது என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை ஹைந்தவ சேவா சங்கமும் அறநியைத்துறையும் ஏற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டன.