இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (10.07.2021) திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார். அதில் முதலாவதாக ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வை முடித்துவிட்டு சமயபுரம் கோவிலை ஆய்வுசெய்தார்.
ஆய்வின்போது அமைச்சர், "தற்போது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் மேலும் எந்தெந்த கோவில்களில் 12 ஆண்டுகள் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது என்கிற புள்ளி விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் 12 ஆண்டுகள் முடிவு பெற்ற கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
சமயபுரம் கோவிலில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் தங்களுக்கு 6,000 ரூபாய் மட்டும் சம்பளம் கொடுப்பதாகவும் தற்போது உள்ள நிலைமையில் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் மிகக் குறைவாக உள்ளது எனவே அவற்றை உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதற்குப் பதிலளித்த அவர் உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் நிச்சயம் உங்களுடைய சம்பளத்தை உயர்த்தி தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கோவில் நிலவரம் குறித்தும் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இணை ஆணையராக பணியாற்றும் கல்யாணியிடம் கேட்டபோது அமைச்சரின் பல கேள்விகளுக்கு "எனக்கு தெரியவில்லை" என்று பதிலளித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமைச்சர், "எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று கூறினால் என்ன அர்த்தம்" என்று காட்டமாக பேசியுள்ளார்.