Skip to main content

பிப்.19-ல் புதுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

fa

 

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் எம்.சண்முகம், பி.மருதப்பா, ஏஎல்.பிச்சை, கே.சித்திரைவேல் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

கஜா புயல் தாக்கத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 131 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2018-19-ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு ஊராட்சியிலும் 50, 60 நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் வரை இன்னும் 50 நாட்களே உள்ளன. அதிலும் விடுமுறை நாட்களைக் கழித்தால் 40 நாட்களுக்குள்தான் வரும். வருகின்ற அனைத்து நாட்களும் வேலை கொடுத்தால்கூட 150 நாட்கள் வேலை வழங்குவதற்குச் சாத்தியமே இல்லை.

 

இந்நிலையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் தற்பொழுது சுழற்சி அடிப்டையிலேயே வேலை வழங்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஒருசில நாட்கள் கூட வேலை கிடைப்பது சாத்தியமில்லாத நிலையை அதிகாரிகள் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இதனால், கஜா புயலிலான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் மேலும் நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்கள். மேலும், இவர்களுக்கான சம்பளத்தைப் பெறுவதற்கு வங்கி வாசல்களில் நாள் கணக்கில் காத்துகிடக்க வேண்டிய நிலை உள்ளது.

 

  எனவே, சுழற்சி அடிப்படையில் அல்லாமல் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். வங்கியின் முகவர்களே வேலைத்தளங்களுக்கு நேரடியாகச் சென்று கூலியை பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பூர்வ கூலி ரூ.224-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத் தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களைத் திரட்டி வருகின்ற பிப்ரவரி 19 அன்று காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
            
 

சார்ந்த செய்திகள்