சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆறுமாதம் காலமாக காணாமல் போன நிலையில் நேற்று திருப்பதியில் நேற்று அழைத்துச்செல்லப்பட்டு தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை கொண்டுவரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்டார். தற்போது அவர் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் முகிலன். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக சில ஆவணப்படங்களை வெளியிட்டார். பிறகு சொந்த ஊர் செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் திடீரென மாயமானதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் கடந்த 141 நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா, எங்கே இருக்கிறார், எதற்காக கடத்தப்பட்டார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்டார். ஆந்திர போலீசார் அவரை அழைத்து கொண்டு சென்ற பொழுது அவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் மற்றும் 7 தமிழர்களை விடுதலை குறித்தும் முழக்கங்களை எழுப்பினார்.
ஆந்திர ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் மூலம் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் முகிலன். தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு தற்போது எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.