சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன் என்பவர் தரிசனம் செய்ய வந்துள்ளார். 61 வயதான இவர் கோவில் 21-ம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன், சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே குழந்தை திருமணம், பக்தர்களைத் தாக்கியது, சக தீட்சிதர்களை தாக்கியது என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிவ பக்தரை தாக்கிய புகாரிலும் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிக்கியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தீட்சிதர்களால் பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. ஆனால் எவை எல்லாம் சட்ட விரோதமோ அதை எல்லாம் ஒரு சில தீட்சிதர்கள் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையை பொறுத்த வரையில் இது சம்பந்தமான நடவடிக்கையை மிக கவனத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டு உள்ளோம்.
கோவிலில் உள்ள தீட்சிதர்கள் நகை சரிபார்ப்பு பணிக்குச் சென்றபோது இந்து சமய அறநிலையத் துறைக்கு நகையை சரிபார்க்க உரிமை இல்லை நீதிமன்றத்தை அணுகுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. சிதம்பரம் கோவிலை பொறுத்த வரையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களின் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இருந்து எந்நாளும் பின் வாங்கப் போவதில்லை. அதற்கான ஆதாரங்களை திரட்டிக் கொண்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.