தமிழக முதல்வர், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையிலும், இளம் விஞ்ஞானிகளை இனம் கண்டு பலப்படுத்தும் வகையிலும், பல்வேறு திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறார். இதனையொட்டி கடலூரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 456 நபர்கள் மாநில அளவிலான இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் இயற்பியல், வேதியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் அவர்களின் திறமைகளை கொண்டு உருவாக்கப்பட்ட செயல் திட்டங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இந்த கண்காட்சியில் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் கண்டுபிடிப்புகள் ஆந்திராவில் நடைபெறும் தென்னிந்திய அளவில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். சமுதாயத்திற்கு உதவும் வகையிலும் மக்களின் பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருந்தது, அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய மலர் கேணி என்ற மொபைல் அப்ளிகேஷன் ஏற்கனவே உள்ளது. மேலும், யூ ட்யூபிலும் அப்லோட் செய்து வருகிறோம். அனைத்தும் இணையதளத்தில் ஏறும்போது உலகம் முழுவதும் உள்ளவர்கள் காண்பார்கள்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே சாதிய ரீதியான பாகுபாடு தொடர்பான ஏற்படும் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “ஏற்கனவே நாங்குநேரி சம்பவத்திற்கு பிறகு ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி உள்ளது. அவர்கள் இது சார்ந்த கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவர்களிடமிருந்து முழு அறிக்கை வந்த பிறகு, இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு திட்டத்தை தயார் செய்யலாம். ஒவ்வொரு ஆண்டு வகுப்பு துவக்கத்திலும் முதல் வாரம் காவல்துறை மூலம் இந்த பிரச்சனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த கடலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்றிக் காட்ட வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அதிகாரியை நியமத்துள்ளோம். அவர்கள் மூலம் மாவட்டத்திலுள்ள நிலையை கேட்டு அவர்களின் கருத்தை உள்வாங்கி வருகிறோம். அதற்கு தகுந்தாற் போல் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் குறைந்த கற்றல் திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம்” எனக்கூறினார்.
இதையடுத்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது, “மெழுகுவர்த்தி தன்னை அழித்துக் கொண்டு வெளிச்சம் தருவது போல, ஆசிரியர்கள் உழைத்து வருகின்றனர். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகள் உள்ளது. கடலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. வரும் காலத்தில் முதன்மை மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு அரசும் நாங்களும் உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் பேசுகையில், “38 மாவட்டங்களில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது, இதன் மூலம் மாணவர்களின் திறமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. அறிவியல் இல்லாமல் உலகத்தில் எதுவுமே இல்லை. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 16 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று வந்த பெருமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சாரும். இல்லம் தேடி கல்வி மூலம் இடை நின்ற ஏராளமான மாணவர்களின் கல்வி தற்போது தொடரப்பட்டு வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், துணை மேயர் தாமரைச்செல்வன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் எஸ்.நாகராஜமுருகன், தொடக்க கல்வி இயக்ககம் இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டனர்.