தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும், நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. பின்னர் அந்த நெல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆலைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக அரைத்து, பின்னர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. கொள்முதல் செய்யும் இடங்களில் ஒரு நெல் மூட்டைக்கு 40 வரை லஞ்சமாக கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
அதைத் தொடர்ந்து, நெல் கொள்முதல் பணிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பாளர் நிலையிலுள்ள அலுவலர்களை கொள்முதல் அலுவலராக அரசு நியமித்தது. ஆனால், இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததால், இந்த துறையில் காணப்படும் முறைகேடுகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததாக தலைமை இடத்திற்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு புகார்களுக்கு உள்ளான கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 313 கண்காணிப்பாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவை நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 25 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 24 பேரும், நாகை மாவட்டத்தில் 7 பேரும், சென்னை தலைமையிடத்தில் இருந்து 30 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 16 பேரும், மதுரை மாவட்டத்தில் இருந்து 14 பேரும், தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தலா 12 பேரும் என மொத்தம் 313 கண்காணிப்பாளர்களை மண்டலம் விட்டு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.