Skip to main content

தீபாவளியை முன்னிட்டு பத்தாயிரம் பயனாளிகளுக்கு இலவச  வேட்டி, சேலைகளை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி!

Published on 28/10/2024 | Edited on 28/10/2024
Minister sakkarapani give free vesti and saree to   beneficiaries on occasion of Diwali

தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர், ஆதரவற்ற விதவைகள்  மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா வேஷ்டி, சேலைகளை  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும்,  கள்ளிமந்தையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில்  பயனாளிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இதில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர்   எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 2 இலட்சம்  விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, 5 பவுனுக்கு கீழ் நகை கடன்  தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.   முதலமைச்சர் உத்தரவினை ஏற்று கடந்த 2  மாதங்களுக்கு முன்பாக புதுடெல்லிக்கு சென்று மத்திய உணவுத்துறை  அமைச்சரை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு 8,000 மெட்ரிக் டன் கோதுமை  வருகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம்.  மத்திய அரசு அக்கோரிக்கையை ஏற்று தற்போது 14,100 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். மேலும் 8 ஆயிரம் மெட்ரிக் டன்  கோதுமை தேவைப்படுகிறது. பொதுமக்களின் அனைத்து  கோரிக்கைகளையும் ஏற்று நிவர்த்தி செய்து தர நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.  பெண்கள் மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்தில்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர்  உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப்  பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத்  திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு  குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது. 

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும்  மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும்  வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி)  படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000  வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல்  செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1  முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம்  குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில்  மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள்  பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 42 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள்  பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம்  சட்டமன்ற தொகுதியில் 125 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு   செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும்  விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம்  புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திண்டுக்கல்  மாவட்டத்தில் மட்டும் 54,896 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 5983 குடும்பங்களுக்கு குடும்ப  அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 58,803 குடும்ப அட்டைகள் இருந்தன. தற்போது வரை ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 64,286 குடும்ப  அட்டைகள் உள்ளன.  இதில் 56,252 பயனாளிகள்  கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள  அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் சொந்த கட்டடத்தில் செயல்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள்  விநியோகத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கண்கருவிழி  பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  தமிழகத்தை இன்னும் 10 ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த  எண்ணத்தில், ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி  வழங்கும் வகையில்  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி  வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. கள்ளிமந்தையம் ஊராட்சியில் மட்டும் 78 வீடுகள்  கட்டப்படவுள்ளன. 

ஒட்டன்சத்திரம் பெண்கள் அரசுக் கல்லூரி அம்பிளிக்கையில் இயங்கி  வருகிறது. இந்தக்கல்லூரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில்  புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியல் ரூ.7.00 கோடியில் அரசு  தொழில்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. படித்த  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம்,  காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு  ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காக தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில்  விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரத்திலும்  விளையாட்டு மைதானம் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விரைவில்  அமைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகப்  பகுதிகளில் உள்ள சாலைகளில்  மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மட்டும் பெருநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  177 நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 

தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்  ஆதரவற்ற விதவைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.  அந்தவகையில், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மட்டும் 9,826 பயனாளிகளுக்கு  இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அதில் கள்ளிமந்தையம்  ஊராட்சியில் மட்டும் 144 வேட்டிகள், 290 சேலைகள் என மொத்தம் 434 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் இன்று வழங்கப்படுகிறது.  ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர், கள்ளிமந்தையம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மட்டும் 923 பணிகள் ரூ.50.00 கோடி மதிப்பீட்டில்  மேற்கொள்ளப்பட்டுள்ளன பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள்  என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு  வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்