சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
“விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை என்பதே கிடையாது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி அமைச்சர்களை முடுக்கி விட்டிருக்கிறார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஒரு மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை வைத்திருக்கிறோம். எங்கள் கவனம் முழுவதும் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலேயே இருக்கிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல் குறித்த சிந்தனை இப்போது எங்களிடம் இல்லை. அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலோ, வேறு எந்த தேர்தலோ, அதிமுக தயார் நிலையில்தான் உள்ளது. குடிநீர் பிரச்சனையை பூதாகரமாக்குபவர்கள், அதை முழுமையாக அறிந்திருக்கவில்லை. பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். மழைவேண்டி நாங்கள் யாகம் நடத்துகிறோம். அவர்கள், குடிநீர் பிரச்சனையைப் பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஜோலார்பேட்டை என்ன ஆந்திராவிலா இருக்கிறது? இல்லை, கர்நாடகத்தில் இருக்கிறதா? தமிழ்நாட்டில் உள்ள தண்ணீரையே தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர விடமாட்டோம் என்று தடுக்கிறார்கள். பிறகெப்படி இவர்களால் கர்நாடக தண்ணீரை கேட்கமுடியும்? இவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால், சென்னையிலுள்ள மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படவேண்டும் என்றல்லவா செயல்படுகிறார்கள்? திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதுவும் பகல் வேடம். திமுக நடத்தும் நாடகம், நடிப்பையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அண்ணாவின் கொள்கை எதனை நாங்கள் காற்றில் பறக்கவிட்டோம்? கி.வீரமணி கடவுள் இல்லை என்கிறார். நாங்கள், கடவுள் இருக்கிறார் என்று சாமி கும்பிடுகிறோம். எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலில்போய் சாமி கும்பிட்டார். அண்ணா மீதுள்ள மரியாதையில் அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் அண்ணாவும் சொன்னார். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று யாகம் நடத்துகிறோம். கி.வீரமணி போன்றவர்களுக்கு எங்களைக் கிண்டலடிப்பது, கேலி பேசுவவது வாடிக்கையாகப் போய்விட்டது. அவருக்கு இதுவே ஒரு தொழிலாகிவிட்டது. ஜெயலலிதாவும் திருப்பதி போனார். எல்லா கோவில்களுக்கும் போனார். நாங்களும் வெள்ளிக்கிழமை என்றால் கோவிலுக்குப் போகிறோம். கோவிலுக்குப் போவது எங்களுடைய இயல்பு.
தி.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது? வீரமணிக்கு என்ன கொள்கை இருக்கிறது. அவருக்கு இந்துக்களை அழிக்கவேண்டும். இந்துக்களை ஒழிக்க வேண்டும். இந்துக் கடவுள்களை அழிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கொள்கை. வேறு கொள்கை கிடையாது. அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அதற்காக இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய வாயைப் பசை வைத்து ஒட்ட வேண்டியதுதான். நாங்கள் சாமி கும்பிடத்தான் செய்வோம். வீரமணி பேச்சைக் கேட்கமாட்டோம்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். நேரு குடும்பம்; ராஜீவ் குடும்பம்; அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக மக்கள் அளித்த வாக்குகள்தான், திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்தான் திமுகவைச் சுமந்தது. திமுக, காங்கிரஸை சுமக்கவில்லை. மற்ற கட்சிகளை வேண்டுமானால் திமுக சுமந்திருக்கலாம்.” என்றார்.