மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைச் சார்பாக மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சுட்டிக் காட்டியது போல் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என கூறியப்படி இரண்டு தவணைகளாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எங்களது அரசு தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத விஷயமான ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கியுள்ளது.
வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாயவிலை கடைகளுக்கு சொந்தமாகக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகாரிகள் மூலம் வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து இரண்டு ஆண்டுகளில் நியாய விலைக் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்க புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதிய குடும்ப அட்டைகள் கோரி ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்துள்ளது. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைவில் குடும்ப அட்டை வழங்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் மையத்தில் எந்த தவறும் நடைபெறாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து, அவர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் பாதிப்பு ஏற்படுவதாக தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் அதனை சீர்செய்ய முதல்வரின் உத்தரவின் பேரில் 19 மாவட்ட ஆட்சியர்கள் காணொளிக் காட்சிகள் மூலம் ஆலோசனை நடத்தி திறந்தவெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூடைகள் பாதிப்பு ஏற்படாமலிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு 44 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது, ஆனால் தற்போது வரை 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் உணவு பொருள் வழங்கல் துறையில் நடைபெற்ற முறைகேடுகளை எங்கள் அரசு விரைவில் வெளிக்கொண்டு வருவோம். கடந்த ஆட்சியில் ஒப்பிட்டு பார்க்கும் போது எங்களது ஆட்சியில் வெளிப்படையாக டெண்டர் நடத்தியதன் மூலம் 84 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் ஆய்வு செய்ய 5 பேர் கொண்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த அரசு ரேஷன் கடைகள் மூலம் நல்ல அரிசி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் புதிதாக வந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். விரைவில் அது சரி செய்யப்படும்." இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.