தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பசுமையை வளர்க்க வேண்டும் என்று கூறி மரக்கன்றுகள் நடுவதுடன் விழாவில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வருகிறார். அதே போல ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி வளாகம், ஏரி, குளம், மயானம், தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். புவி வெப்ப மயமாதலைத் தடுக்க இதுவே சிறந்த வழி மேலும் குறைந்த அளவில் உள்ள நிலமாக இருந்தாலும் நாட்டு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன் குறுங்காடுகள் அமைக்கவும் செய்து வருகிறார். இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் குறுங்காடுகள் வளரத் தொடங்கியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கடந்த காலங்களைவிட அதிக அளவிலான மரங்கள் வளர்ந்து நிற்கும், நிழலும் பழங்களும் தரப் போகிறது.
அதே போலக் குறுங்காடுகள் அமைப்பது பற்றி இளைஞர்கள் ஆர்வம் காட்டும் போது மற்ற பணிகளைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு குறுங்காட்டில் முதல் கன்றை நட்டதோடு புறப்பட்டுவிடாமல் கடைசி கன்று நடும் வரை நின்று பார்த்துவிட்டு கன்றுகளைப் பாதுகாக்கக் குச்சிகளையும் நட்ட பிறகே அங்கிருந்து செல்கிறார். அத்தோடு மறந்துவிடாமல் அடுத்த முறை அந்தப் பகுதிக்குச் செல்லும் போது தான் நட்டுத் தொடங்கி வைத்த மரத்தை மறக்காமல் குறுங்காடுகள் எப்படி வளர்ந்துள்ளது என்று பார்த்துவிட்டே செல்கிறார். அதில் மரக்கன்றுகள் கருகி இருந்தாலோ பாதுகாப்பு, பராமரிப்பு குறைவாக இருந்தாலோ அதனை உடனே சரி செய்யச் சொல்கிறார்.
இது போல நேற்று (17.08.2024) அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஆவணத்தான்கோட்டை கிராமத்தில் குறுங்காடு அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கச் சென்றவர் கடைசி கன்று நடும் வரை நின்று பார்த்துவிட்டு அனைத்து கன்றுகளும் உயரமாக இருப்பதால் காற்றில் ஒடிந்து விடாமல் இருக்க கனமான குச்சிகளை நடவும் ஆலோசனை சொல்லிவிட்டுச் சென்றார். இன்று (18.08.2024) காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர் நேற்று குறுங்காடு அமைத்த ஆவணத்தான்கோட்டைக்குச் சென்று அனைத்து மரக்கன்றுகளையும் பார்த்தார்.
அதோடு அங்குத் தயாராக இருந்த தண்ணீர்க் குடங்களைத் தூக்கிச் சென்று ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் ஊற்றிவிட்டு சில கன்றுகளுக்குத் துணையாக நடப்பட்ட குச்சிகளை ஆழமாக ஊன்றச் சொன்னார். மேலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று குறுங்காடு பாதுகாவலரிடம் கூறிவிட்டுச் சென்றார். இதே போல அடிக்கடி குறுங்காடுகளை அமைச்சர் பார்க்க வருகிறார் என்பதால் அனைத்து கிராமங்களிலும் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுகளில் இதுவரை இழந்த மரங்களின் எண்ணிக்கையை எட்டிப்பிடிப்போம் என்கிறார்கள் இளைஞர்கள்.