சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “கலைஞர் முதல்வராக இருந்தபோது கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வழங்கினோம். அது ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் அட்டை வழங்கியுள்ளோம். மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்குகிறோம். ஒரு பெண் முதல்வராக இருந்தபோதும் கூட இதுபோன்ற திட்டம் இல்லை. ஆனால் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர், 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ்நாட்டில் தான் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்” என்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் கோ. ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் ம. சிந்தனைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருப்பதி, துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், வட்டாட்சியர்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், புவனகிரி சிவக்குமார், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழநி, மாவட்ட திமுக பொறியாளர் அணி செயலாளர் அப்பு சந்திரசேகரன், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், திமுக நிர்வாகிகள் சங்கர், நடராஜன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் வட்டாட்சியர் செல்வக்குமார் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சித்மபரம் மேல வீதியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.