ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும். அதை ஏனோ பலரும் வெளிப்படுத்துவதில்லை. அதனால் அவர்களுக்குள்ளாகவே முடங்கிப் போகிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விழாவிற்கு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாணவிகளிடம் இந்தப் பள்ளி தொடர்ந்து படிப்பில் சாதித்து வருகிறது பெருமையாக உள்ளது. அதே போல உங்களுக்குள் எத்தனையோ தனித்திறமைகள் ஒழிந்து கிடக்கும் அவற்றையும் வெளிக்கொண்டு வந்து சாதிக்க வேண்டும் என்றார்.
இதனைக் கேட்ட மாணவிகளின் பரதம், சிலம்பம் போன்ற பல நிகழ்வுகளை செய்தனர் மாணவிகள். அப்போது சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மதியானந்தன் மகள் திரவியா என்ற +1 மாணவி 2 பேனா, 2 பேப்பருடன் வந்த அமைச்சர் முன்பு அமர்ந்து இரு பேனாக்களையும் இரு கைகளில் பிடித்துக் கொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தையை இரு பக்கமும் எழுதினார்.
வலது கையில் இடமிருந்து வலமாகவும் (சரியாக படிக்கும் படியாக) இடது கையில் அதே வார்த்தைகளை ஒரே நேரத்தில் வலமிருந்து இடமாகவும் (கண்ணாடியில் பார்த்து படிப்பது போல) எழுதி அசத்தினார். அதே போல வகுப்பறை கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு எழுதியதைப் பார்த்த அமைச்சர் மெய்யநாதன் மாணவி திரவியாவின் தனித்திறமையை பாராட்டி சால்வை அணிவித்து மேலும் இதில் சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். விழாவில் இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி, பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், எஸ்எம்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆசிரியர்கள், மாணவிகளும் பாராட்டினார்கள்.
இதே போல கடந்த ஆண்டு இந்தப் பள்ளி மாணவி கலைத்திருவிழாவில் முதலை மணல் சிற்பம் செய்து மாநில அளவில் சாதித்தார். பல மாணவிகள் பாடல்களிலும் சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.