புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை அம்மாசத்திரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த வாரம் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, இரண்டரை கி.மீ. தூரத்தில் இருந்த ஒரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அந்தக் குண்டு, மண்டை ஓட்டை உடைத்துக்கொண்டு முளைக்குள் சிக்கியது.
அச்சிறுவனுக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் முதலுதவி சிகிச்சையும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சையும் அளிக்கப்பட்டு, தலையிலிருந்த துப்பாக்கிக் குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இருந்தபோதிலும் சிறுவனின் உடல்நிலை முன்னேற்றமின்றி அதே நிலையில் உள்ளது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை தொகுதி சி.பி.எம். எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் சிகிச்சையிலிருக்கும் சிறுவனைப் பார்த்து சிகிச்சையளிக்கும் மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தான் பார்க்க வந்ததாக கூறிய அமைச்சர் மெய்யநாதன், சிறுவனது தாய், தந்தையிடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கி சிறுவனுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஆறுதல் கூறினார்.
கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்துரை கூறும்போது, “துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிகிச்சையில் இருக்கும் ஏழை தொழிலாளியின் குழந்தை புகழேந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று தொடர்ந்து மருத்துவர்களிடம் வலியுறுத்தி கேட்டுவருகிறோம். அதே போல யார் சிறுவனை சுட்டார்களோ அவர்களை அடையாளம் கண்டு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இதேபோல தொடர்ந்து சம்பவங்கள் நடப்பதால் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறோம். கள ஆய்வு செய்திருக்கிறோம். விரைவில் முதலமைச்சருக்கு அறிக்கை கொடுப்போம்” என்றார்.