சென்னையில் இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர், ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் உட்பட நான்கு பேர் கடந்த மார்ச் 20- ஆம் தேதி அன்று இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். அதில், பிணைக்கோரி பிரவீன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அஜித்குமார் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் பிரவீன் பின்னால் அமர்ந்து பயணித்ததாகவும், வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.
ஆனால், பிரவீன் உள்ளிட்டோர் பந்தயத்தில் ஈடுப்பட்டதற்கான சாட்சியங்கள் அடிப்படையிலேயே அவர்களை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பந்தயத்தில் ஈடுபடுவதாகவும், காவல்துறையினர் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, மூத்த குடிமக்களை அச்சுறுத்தும் வகையில், இரு சக்கர வாகன பந்தயங்களில் ஈடுபடுவதாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள், இரும்பு கம்பிகளை சாலையில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தி மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும், நீதிபதியே வேதனையோடு தெரிவித்தார்.
பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதத்திற்கு வார்டு பாய்களுக்கு உதவியாகப் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையோடு, பிரவீனுக்கு பிணை வழங்கப்பட்டது. மேலும், பிரவீனின் செயல்பாடுகள் குறித்து அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.