ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.பிரகாஷ் தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசுவக்காடு, குட்டிக்கிணத்தூர், ஆயிக்கவுண்டன்பாளையம், மஞ்சுபாளையம், கொல்லப்பட்டி, மக்கிரிபாளையம் மற்றும் திருச்செங்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட வால்ராசம்பாளையம், அங்காளம்மன் கோவில், அண்ணாசிலை, புள்ளிக்கவுண்டன்பாளையம், அண்ணாநகர், உப்புபாளையம், கல்லுகட்டுயூர், பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம், அண்ணாநகர், நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக குமாரபாளையத்தில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவர்களுக்காக உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்மன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது போல வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அளிக்கப்பட்டுள்ள திட்டங்களும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.
சேது சமுத்திர திட்டம், புதிய கல்விக் கொள்கை ரத்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் இடஒதுக்கீடு 33 சதவீத உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு ஜிபி அளவில் கட்டணமற்ற இலவச சிம் கார்டு வழங்கப்படும். மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வைபை சேவை வழங்கப்படும். பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும், கேஸ் ரூ.500க்கும் வழங்கப்படும். பாஜ அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்” என்றார். பிரசாரத்தின் போது திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.