தேர்தல் பத்திரம் விவகாரத்தில் அதிகப்படியாக பாஜக நிதி பெற்றுள்ள நிலையில் பல நிறுவனங்களை மிரட்டி பாஜக பணம் பறித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கி இருக்கிறது. அதிலிருந்து மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக இந்திய பிரதமர் பல்வேறு வகைகளில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 2019-ல் இந்த தேர்தல் பத்திரம் நடைமுறையை அவர்கள் கொண்டு வர முயற்சித்த நேரத்தில் ராகுல் காந்தி சொன்னார், 'இது ஒரு கொள்ளையடிக்க கூடிய முயற்சி என்று' சொன்னார். அது மட்டுமல்ல அன்று ஆர்பிஐ, தேர்தல் ஆணையம் போன்றவர்கள் இது வெளிப்படைத் தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். இது தேர்தல் நடைமுறையை சீரழித்து விடும். ஊழலை ஊக்குவிக்க வாய்ப்பு உள்ளது என்றனர். ஆனால் எல்லாவற்றையும் மீறி அதை கொண்டு வந்து இன்று கோடி கோடியாக பணக்காரர்களை மிரட்டி, அடிபணிய வைத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் காண்ட்ராக்டர்களுக்கு சலுகைகளை கொடுத்து பணத்தை பெற்று இருக்கிறார்கள். அதேபோல நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பல நிறுவனங்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார்கள். இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களால் எப்படி நூற்றுக்கணக்கான கோடிகளை தரமுடிந்தது. வருமான வரியிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக நஷ்டக் கணக்கு காட்ட வைத்தீர்களா? இல்ல உண்மையிலேயே நஷ்ட கணக்கில் ஓடிக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கு நீங்கள் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்து கொடுத்து அதற்கு கையூட்டாக பணத்தைப் பெற்றீர்களா? என்ற கேள்வி எல்லாம் எழுந்துள்ளது. சிஏஜி அறிக்கையில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என தெரிவித்ததை தொடர்ந்து அதையும் ஒரு மூடி மறைக்க பல்வேறு சம்பந்தமில்லாத, சாதாரண மக்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை கிளப்பி மக்களை உணர்ச்சிவயப்படுத்தி திசை திருப்பினார்கள்' என்றார்.