போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருக்கிறது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (16.07.2021) அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கையில், ‘பிளாஸ்டிக் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் நச்சுக் காற்று காரணமாக அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக் கவசம், மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள், மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தையும் தனித்தனியாகப் பிரித்து உரிய அமைப்பிடம் கொடுக்க வேண்டியது மருத்துவமனைகளின் கடமை.
நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. எனவே ஏரியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும், மருத்துவக் கழிவுகளைத் தரம் பிரித்துக் கையாள மருத்துவமனைகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மதுரவாயில் எம்.எல்.ஏ. கணபதி ஆகியோர் போரூர் ஏரியை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “போரூர் ஏரி மொத்தம் 252 ஏக்கர் அரை ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 200 ஏக்கர் குப்பை கொட்டும் இடமாகவும் மரம், செடிகள் வளர்ந்த இடமாகவும் மாறியுள்ளது. அனைத்து துறைகளையும் சேர்த்து இங்குள்ள மரம், செடி, கொடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு முழுமையாக காம்பவுண்டு சுவர் அமைக்கப்படும். போரூர் ஏரியில் வெளி வாகனங்களிலிருந்து குப்பைகள் கொட்டுவதைத் தடுப்பதற்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும். குப்பைகளை யார் கொட்டினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
முன்னதாக காலை 10 மணிக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.