Skip to main content

மனநல ஆலோசனை சேவை அலைபேசி திட்டத்தை துவங்கிவைத்த அமைச்சர்!!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
Minister launches mental health counseling service

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்துவருகிறார். வியாழக்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்த பிறகு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை சின்னத்துரை, விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா தொற்று சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10, 15 நாட்களில் கரோனா தொற்று குறைந்துள்ளது. 62 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. 3வது அலை வராது, வந்தாலும் அதனை எதிர்கொள்ள, முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி அனைத்தும் தயாராக உள்ளது. 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. அதேபோல மாவட்டத் தலைநகரங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் 28 ஆக்சிஜன் படுக்கையுடன் 100 படுக்கைகள் தயாராக உள்ளன. இதேபோல திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறப்பு வார்டுகள் உள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும் போது "புதுக்கோட்டை பல் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் தொடங்கப்படும்.

 

அதேபோல ஒப்பந்த மருத்துவ பணியாளர்களுக்கான தினக்கூலி கிடைக்கவில்லை என்ற புகார் வந்தது. அதுபற்றி மாவட்ட ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்". நீட் தேர்வு விலக்கு பற்றிய கேள்விக்கு "ராஜன் குழு ஆய்வு செய்துவருகிறது" என்றார். மேலும் தமிழ்நாட்டிற்கு 12.36 கோடி தடுப்பூசி தேவை இருந்தது. இப்போதுவரை கிடைத்தது போக, 10.20 கோடி டோஸ் தடுப்பூசிகள் வரவேண்டியுள்ளன. அடுத்து முக்கியமாக கரோனா சிகிச்சைக்கு சென்று இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் கரோனா இறப்பு என்று பதிவாகவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

சிகிச்சைக்கு சேரும்போது பாசிட்டிவ் இருக்கலாம். ஆனால், சில நாளில் நெகட்டிவாகி இணை நோய்களால் இறக்கலாம். மேலும், இறப்பு சான்றிதழில் காரணம் குறிப்பிடுவதில்லை என பலரும் கூறுகின்றனர். அதாவது கரோனாவால் இறக்கும் அனைவருக்கும் நிவாரணம் இல்லை. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத்தான் நிவாரணம்” என்று கூறினார். தொடர்ந்து மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் 'மீண்டு வருவோம்' என்ற மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கான மனநல ஆலோசனை சேவை அலைபேசி திட்டத்தை தொடங்கிவைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்