திருச்சி மாவட்டம், வண்ணாகோவில் பகுதியில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் வேளாண்மை சங்கமம் - 2023 நிகழ்ச்சியைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 50,000 விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பாரம்பரிய நெல் விவசாயத்தில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கே. என். நேரு, “இலவச மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இருந்த காலம் மாறித் தற்போது மின்துறை அதிகாரிகள் நேரில் சென்று உங்களுக்கு வேண்டுமா இலவச மின்சாரம் என்று ஆய்வு செய்யும் நிலை உள்ளது. இதுவரை தனியார் மட்டுமே விவசாயக் கண்காட்சிகளை நடத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அரசு சார்பில் விவசாயக் கண்காட்சியை முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். கலைஞர் காலகட்டத்தில் 12 லட்சம் இலவச மின் இணைப்புகள் இருந்தது. தற்போது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண்மைக் கண்காட்சி திருச்சியில் நடப்பது திருச்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாக உள்ளது.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “2 நாளுக்கு முன்னர் தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை துவக்கி வைத்தார். கடந்த ஆட்சியைத் தற்போதைய ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, விவசாயிகள் எந்த வித போராட்டமும் நடத்தவில்லை. மேலும் நமது ஆட்சியில் விவசாயிகளுக்கு அனைத்துமே கிடைக்கிறது என்பதனை நாம் பார்க்க முடிகிறது. இதற்கு விவசாயச் சங்கங்களே சாட்சியாக உள்ளனர். தேர்தல் நேரத்தில் தமிழக முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை உருவாக்கிப் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காகச் செய்து வருகிறார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடையில் பேசியது.. வேளாண்மை சங்கமம் - 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் சிறுதானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் கண்காட்சியைப் பார்க்கும் போது மனமும் பசுமையாக உள்ளது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. வேங்கை மகன் என்று வேளாண் துறை அமைச்சரை நாங்கள் கூறுவோம் ,ஆனால் தற்போது வேளாண் மகனாக மாறி உள்ளார். மற்ற துறைகளை வளர்க்க நிதிவளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறைக்கு நீர்வளம், நிதி, பருவநிலை அவசியம் ஆகும். ஆகையால் கழக ஆட்சியில் பருவ மழையால் நீர் வளமும் கை கொடுத்தது. மண் வள மேலாண்மை, இளைஞர்களைத் தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் விவசாயத் துறையில் செயல்பட்டு வருகிறது.
119 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயத்தின் வாயிலாக மொத்தமாகப் பயிர்களைப் பெற்றுள்ளோம். 5.36 லட்சம் ஏக்கரில் குறுவைச் சாகுபடி நடப்பாண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளது. குறுவை சாகுபடியில் 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் தற்போது செய்துள்ளோம். தமிழ் மண்வளம் என்கிற இணையதளத்தை நான் துவங்கி வைத்துள்ளேன். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதை விட நெல் குவிண்டாலுக்கு - 100 ரூபாயும், இதர நெல்லுக்கு 75 ரூபாயும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கழக அரசு அமைந்த பிறகு முதலாவது 1 லட்சம் மின் இணைப்புகள் கொடுத்தோம், அதற்குப் பின்னர் 50 ஆயிரம் பேருக்கு வழங்கினோம், தற்போது மீண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குகிறோம். கடந்த 10 வருடங்களாக இருந்த ஆட்சியில் - 2.20 லட்சம் விவசாய மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது . ஆனால் 2 ஆண்டுகளில் நாம் 2 லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பை வழங்கி உள்ளோம். நாம் சொல்வதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்.
இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வேளாண்மையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முக்கியமாக இந்தக் கண்காட்சியைப் பார்வையிட வேண்டும். வேளாண்மை என்பது வாழ்க்கை மற்றும் பண்பாடாக மட்டுமே உள்ளது. ஆனால் அவர்கள் லாபம் அடைய வேண்டும். விவசாயிகளுக்கு மூலதனம் மற்றும் கடன் உதவி வழங்கப்படுகிறது. வேளாண்துறை விரும்பி வரக்கூடிய துறையாக மாற வேண்டும். வேளாண்துறை வர்த்தகத் துறையாக மாற வேண்டும். இந்தக் கண்காட்சியை அனைத்து மாவட்டத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.
மேலும், குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கான கால நீட்டிப்பு வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆகையால் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்திற்கான கால நீட்டிப்பு, ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது, அதே போல் திட்டத்திற்கான நிதி 75 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மைத்துறை மென்மேலும் வளர வேண்டும் என்றால், விவசாயிகள் மட்டுமல்ல அத்துறை சார்ந்த அதிகாரிகளும் வேளாண்மையை உறுதியாகக் கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.