திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிமாங்குடி ஊராட்சியில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அத்துடன் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்கு நாங்கள் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதை முடிவு செய்ய வேண்டியது தமிழக முதல்வர்தான். அவர் அறிவிப்பதற்கு நாங்கள் கட்டுப்படப் போகிறோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து தமிழக அரசு ஏற்றக்கூடிய பல்வேறு சட்ட விளக்கம், அறிவிக்கக்கூடிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்களே பலர் அந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைப்பதற்கு சட்டமன்றத்தில் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் சுமார் 7 கிலோ மீட்டர் அளவில் எந்தவித கழிவு நீரும் கலக்காமல் தண்ணீர் தூய்மையாகச் செல்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். அதேபோல் கோரையாற்றின் கரையில் 40 அடி அகலம் உள்ள சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு அந்த சாலை பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து முடிவடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகளும் நிறைவடையும் என்று கூறினார்.
மேலும் முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் சென்றடைவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே முசிறி தொகுதிக்கு தமிழக முதல்வர் குடிநீர் வழங்குவதற்கான பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் விரைவில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் முரளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.