திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என். அருண் நேரு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து திருச்சி வருகை புரிந்த கே.என். அருண் நேருவுக்கு, திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் சுங்கச்சாவடி அருகே மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி தலைமையில் திமுகவினர் திரண்டு ஆரத்தி எடுத்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் நேரு, “தமிழக அரசின் திட்டங்களை அடிப்படையாக வைத்துதான் ஒன்றிய அரசு திட்டங்களை அறிவிக்கிறது. மக்களின் உரிமையை காக்கவும் அனைத்து வளங்களையும் தமிழ் மக்கள் பெற வேண்டும் என்பதற்கான தேர்தலாக இந்த தேர்தலை பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரம்பலூர் மக்களின் முக்கிய கோரிக்கையான ரயில் நிலையம் அமைவதற்கான சாத்தியக் கூறுகளைக் கேட்டறிந்து அதனைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலின் தான் எப்போதும் ஹீரோ. அனைத்து மக்களின் நலனை பேணும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது” என்றார்.
இதனிடையே அவரை வரவேற்க வந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு அருண் நேருவுக்கு மாலை அணிவித்தனர். இதனால் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் தள்ளுமுள்ளுக்கு ஆளாகினர். இதனைக் கண்ட அருண் நேரு செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.