Skip to main content

கொள்ளிடம் தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என். நேரு

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

Minister K.N. Nehru inspect trichy kollidam river

 

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளைத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை ஆய்வு செய்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என் நேரு, “திருச்சியில் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வருகிற ஜூன் 26ம் தேதி தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து 11 மணி அளவில் புதிதாகக் கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

 

கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில், இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கலைஞர் மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார். இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களைக் கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார்.

 

திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர் வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்” என்றார். 


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்