தமிழ்நாடு முழுவதும் தேசிய சித்த மருத்துவ தினம் இன்று (21.12.2021) சித்த மருத்துவத் துறைகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில், தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று நடைபெற்ற மூலிகைக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார்.
சித்த மருத்துவத்தின் அவசியம் குறித்தும் தேவை குறித்தும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆங்கில மருந்துகளால் முடியாத பல அதிசயங்களை சித்த மருத்துவமும் செய்கிறது. எனவே சித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.
அதேபோல் பேராசிரியர் அன்பழகன், வீராசாமி ஆகிய இருவரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த காலகட்டங்களில் அவர்கள் இருவரும் சித்த மருத்துவத்தைத் தவிர வேறு எந்த மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. ஆனால் எங்களால் தற்போது பயன்படுத்துவதற்கான நேரமும் சூழலும் அமைவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், திருச்சியில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு வருகிற மானியக் கோரிக்கைகளில் சித்த மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பு சேர்க்கப்படும் என்று தெரிவித்தார்.