குடியுரிமை சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பது கூட்டணி தர்மத்திற்காகவே என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குடியுரிமை சட்டத்திற்கு இந்தியாவே ஆதரவு கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
![Minister Kamaraj about CAA](http://image.nakkheeran.in/cdn/farfuture/S3DgdhHKc8l2yiW2-wnW6zuNg-ocBL0DkJNc8k-OGw4/1576995142/sites/default/files/inline-images/11_70.jpg)
பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவால் நாடே போராட்டத்தால் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் துப்பாக்கிசூடுவரை காவல்துறையினர் சென்றுள்ளனர். இதற்கிடையில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் கட்சி பாகுபாடுகளை கலைந்து தாலுக்கா வாரியாக ஓரிடத்தில் திரண்டு மிக பிரமாண்ட போராட்டத்தை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அய்யம்பேட்டை உள்ளிட்ட சில ஊர்களில் உள்ள ஜமாத்துக்களில் தண்டோரா மூலம் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் வாக்களிக்கக் கூடாது என பிரச்சாரம் செய்துவருகின்றனர். மேலும் திமுக தலைமையோ அனைத்துக்கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்த தயாராகிவருகிறது.
இந்நிலையில் அதிமுக அமைச்சர் காமராஜ் ," நாங்கள் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து வருகிறோம். வேறு வழி இல்லாமல் மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்." என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ஆனால் தற்போது, "குடியுரிமை சட்டத்திற்கு இந்திய நாட்டில் உள்ள பல முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் ஆதரித்துள்ளன. அதனால் நாங்களும் ஆதரிக்கிறோம், சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் ,தமிழகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு உத்திரவாதம் அளித்ததன் அடிப்படையில் தான் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளோம்". என்று மாற்றிக் கூறியுள்ளார்.