திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 2, 8, 9, 10 ஆகிய வார்டு பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அதனடிப்படையில், நேற்று முதன் முதலில் 10வது வார்டு வி.எம்.எஸ்.காலனி மற்றும் அண்ணா நகர் பகுதிக்குச் சென்றபோது கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட தார் சாலைகளைப் புதுப்பித்துத் தரவேண்டும் என்றும், வி.எம்.எஸ். காலனி பகுதியில் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பின்னர் வடிகால் செல்லும் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து அந்த இடத்தை சர்வே செய்ய உத்தரவிட்டார்.
அதன்பின்னர் 9வது வார்டு பகுதிக்கு நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த 10 இளைஞர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். பின்னர் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மருத்துவ வசதிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அதன்பின்னர் 8வது வார்டு சௌராஷ்ரா காலனிக்குச் சென்றபோது சௌராஷ்ரா சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தார் சாலை வசதி, மின் கம்பத்தை மாற்றிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்கள் வீட்டிற்கு பட்டா வசதி செய்து கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதைக் கேட்ட அமைச்சர் பெரியசாமி, உடனே மாவட்ட சப் கலெக்டரை தொடர்புகொண்டு, பட்டா கொடுக்க உத்தரவிட்டார். அதேபோல், மின்வாரிய துணை பொறியாளரைத் தொடர்பு கொண்டு அப்பகுதியில் பழுதடைந்து இருந்த மின் கம்பத்தை மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார்.
2வது வார்டு பகுதிக்குச் சென்றபோது தங்களுக்கு புதிய கழிப்பறை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி தனது சொந்த செலவில் குளியலறையுடன் கூடிய கழிப்பறை வசதி செய்து கொடுப்பேன் என உறுதியளித்ததோடு அதற்கான பணிகளையும் ஒரே நாளில் தொடங்க உத்தரவிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “1989ம் ஆண்டு முதல் இன்று வரை எவ்வளவோ பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர்கள் சின்னாளபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது அவர்கள் எனக்கு வாக்குகளை வாரி வழங்கியதால், வரலாறு காணாத வெற்றியைப் பெற முடிந்தது. சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 10 வருடங்களாகச் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை வைத்து சின்னாளபட்டியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தேன். தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு இன்னும் கூடுதலான நலத்திட்டங்களை சின்னாளபட்டி மக்களுக்குச் செயல்படுத்துவேன்” என்றார்.
இதில் ஒன்றிய செயலாளர் முருகேசன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா, துணைத் தலைவர் ஆனந்தி உள்பட கவுன்சிலர்களும் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.