Skip to main content

வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு; கோரிக்கை வைத்த பத்திரிகையாளர்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

minister ganesan surprise inspection for virudhachalam taluk office

 

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வி. கணேசன் நேற்று (04.05.2023) விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோட்டாட்சியர் லூர்து சாமி, வட்டாட்சியர் அந்தோணி ராஜ், மண்டல வட்டாட்சியர்கள் சாந்தி, வேல்முருகன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

 

ஆய்வின் போது அதிகாரிகள் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருகிறார்களா என்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்த பதிவேடுகளையும் அதில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வளவு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது என்பது குறித்தும்  சமூக நலத்துறை, வட்ட வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என துறை வாரியாக ஆய்வுகளை நடத்தினார். மேலும் மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். அமைச்சர் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த போது ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து அமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டிய நல்லூர் கிராமத்தில் உள்ள ஏரி தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியில் வளரும் மீன்களை அப்பகுதி மக்கள் பிடிப்பதற்கு உரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடனே அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கையுடன் கலைந்து சென்றனர்.

 

அமைச்சரின் இந்த ஆய்வின் போது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரங்கப்பிள்ளை, பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்