திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமத்தில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவாழ்வு முகாமில் 321 வீடுகள் கட்டும் பணிகள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் என மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 14 ஆம் தேதி அன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு முகாமை திறந்து வைத்து, குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க இருக்கிறார்.
அதற்கான விழா ஏற்பாட்டு பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேரடியாக முகாமை பார்வையிட்டு, விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். முகாமில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், தெருக்கள், தெருவிளக்குகள், விழா நடைபெறும் இடத்தில் மேடைப்பணிகள், நுழைவு வாயில், பயனாளிகள் அமரும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார், திண்டுக்கல் வட்டாட்சியர் சந்தனமேரி கீதா, பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.