ஒட்டன்சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கியில் திடீரென உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதன்பின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ''வரும் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தப் பொங்கல் தொகுப்பில் குறிப்பிட்டுள்ள பொருட்களில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, துணிப்பை என இருபது வகை மளிகைப் பொருட்கள் தொகுப்புடன் ஒரு முழுநீள கரும்பு ஆகியவை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 747 முழுநேர நியாய விலைக் கடைகள் மற்றும் 288 பகுதிநேர கடைகள் என ஆகமொத்தம் 1,035 நியாய விலைக் கடைகளில் உள்ள 6 லட்சத்து 64 ஆயிரத்து 970 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் 40 சதவீத அளவுக்கு வரப்பெற்று நியாய விலைக் கடைகளுக்கு 23ஆம் தேதிமுதல் அனுப்பப்பட்டுவருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் மளிகைப் பொருட்களின் தரம், எடை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மளிகை தொகுப்புகளை எடை குறைவின்றி நியாய விலைக் கடைகளுக்கு விரைந்து அனுப்பிட கிடங்கு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் விசாகன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.