சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகளைப் பெற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மூதாட்டிகள் கையில் மண் கலயம் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) உதவியாளர் எனக்கூறி இடைத்தரகர் ஒருவர், முதியோர் உதவித்தொகைக்கு லஞ்சம் கேட்டுப் பேரம் பேசும் ஒலிப்பதிவு, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீயாய் பரவியது.
அந்த உரையாடலில், சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா என்பவர், தனது செல்ஃபோனில் இருந்து விஏஓவின் உதவியாளர் என்று சொல்லப்படும் நபரிடம் பேசுகிறார். அதில், “அண்ணா கேட்டீங்களா?” எனக் கேட்கிறார். அதற்கு பாலு என்ற அந்த இடைத்தரகர், “எல்லோரும் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். சிவாஜியும், பாட்டியம்மாவும் எவ்வளவு தருவாங்க?” என்று கேட்கிறார். அதற்கு கவிதா, “3000 ரூபாய் வரை வைத்துள்ள”தாக கூறுகிறார். அதற்கு பாலு, “அந்தப் பணத்தை வேறு யாரிடமும் தர வேண்டாம். என்னிடமே கொடுங்கள். தாலுகா ஆர்.ஐ.,க்கு 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும்” என்று கூறுகிறார். இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
இதுகுறித்து சேலம் மேற்கு தாலுகா சமூகப்பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜேஷ்குமார், உரையாடலில் குறிப்பிட்ட கவிதா என்பவரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர், தன்னிடம் பணம் கேட்ட நபர் விஏஓ உதவியாளர் அல்ல; இடைத்தரகர் என்று கூறியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் சிலருடைய உதவித்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது போன்றவர்களை தொடர்புகொண்டு, இடைத்தரகர் பாலு பேசுவார். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறுவார். அந்த வகையில் கவிதாவை தொடர்புகொண்டு அவர் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, உதவித்தொகை பெற்றுத் தருவகாகக் கூறி அதிகாரிகள் பெயரில் லஞ்சம் வசூலிக்க முயன்ற இடைத்தரகர் பாலு மீது காவல்துறையில் புகார் அளிக்க வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.