பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லாத ஓ.பி.எஸ் வாடகை வீடு எடுத்து தனது தொகுதியான போடியில் தங்கியுள்ளார்.
கடந்த பத்து நாட்களாக தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், கம்பம், தேனி, போடி, கூடலூர் ஆகிய ஐந்து நகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக, கடந்த 21-ம் தேதி முதல் பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது.
இப்படி மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கடைபி டிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு வந்தார். தனது வீடு பெரியகுளத்தில் இருப்பதாலும் பெரியகுளம், முழு ஊரடங்குக் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், நேராக, தனது தொகுதியான போடிக்குச் சென்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியுள்ளார்.
இப்படி போடியில் வாடகை வீடு எடுத்து ஓபிஎஸ் தங்க வேண்டிய அவசியம் என்ன என கட்சிகாரர்கள் சிலரிடம் கேட்டபோது, “அண்ணன் ஓபிஎஸ் எப்போதும் பெரியகுளம் வீட்டில்தான் தங்குவார். அப்படி இல்லையென்றால் போடியில் உள்ள தனது அலுவலக மாடியில் தங்குவார். தற்போது பெரியகுளத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், நேராக போடி வந்துவிட்டார். ஆனால், போடி அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் அங்கே தங்க முடியவில்லை. உடனே அலுவலகம் அருகே இருக்கும் வீட்டினை வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்தோடு, போடியில் தங்கியுள்ளார்” என கூறினார்கள்.