வரும் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நான் தான் சிஎம் என்று நடிகர் வடிவேல் காமெடியாக கூறியுள்ள சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடர்பாக முக்கிய அறிவிப்புக்களை நேற்று அறிவித்தார். அதன் படி ஆட்சிக்கு ஒருவரும், கட்சிக்கு ஒருவரும் தலைமைப் பொறுப்பை ஏற்பதே தன்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்தார். இதற்கு அவர்கள் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், நடிகர் வடிவேல் இதுதொடர்பாக காமெடியாக கருத்து தெரிவித்துள்ள சம்பவம் சிரிப்பை வரவைத்துள்ளது. ரஜினியின் கருத்து தொடர்பாக நேற்று திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் வடிவேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஒன்றுக்கு இரண்டுமுறை பத்திரிகையாளர்களின் கேள்விகளை கவனமாக கேட்ட வடிவேல்," ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது" என்றார். செய்தியாளர்கள் ரஜினியின் நேற்றைய பேச்சை மீண்டும் நினைவுபடுத்த அதற்கு பதிலளித்த நடிகர் வடிவேல் "ரஜினி சொன்னது சரிதானே, இதனை அனைவரும் வரவேற்க வேண்டும்" என்றார். மேலும் பேசிய அவர், "நான் 2001ல் நான்தான் சிஎம் ஆக வரவேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன் என கூற, அருகில் இருந்தவர்கள் 2021 என்று திருத்த, வடிவேலுவும் 2021ல் நான்தான் சிஎம், நான்தான் சிஎம், எனக்கு ஓட்டுபோடுவீங்களா" என்று காமெடியாக பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டுவிட்டுச் சென்றார்.