
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக தமிழ்நாடு அரசு விருது பெற்ற வடகாடு புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிட்ட நிலையில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, ‘மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் பள்ளியை மூடிவிடுவார்கள். நாம் படித்த பள்ளியில் நம் பிள்ளைகளும் படிக்க வேண்டும் அதனால் பள்ளியின் உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்கி தரம் உயர்த்துவோம்’ என்று முடிவெடுத்தனர்.
அதற்கு சான்றாக உள்ள பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைப் பார்த்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மணி வழிகாட்டுதலில் அமைச்சர் மெய்யநாதன், பொதுமக்கள் உதவியோடு ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் சில மாதங்களில் கட்டமைப்புகள் மாற்றப்பட்டு திறன் வகுப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் என அனைத்து வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்கத்துக் கிராமத்தில் இருந்தும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் கொண்டு வந்து புள்ளாச்சிகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். மூடப்பட வேண்டிய நிலையில் இருந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்து தற்போது தொடக்கப் பள்ளியில் 30 குழந்தைகளும் மழலையர் வகுப்பில் 10 குழந்தைகளும் படிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்பள்ளியின் ஆண்டுவிழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக அரசு பள்ளிகளில் படித்து இன்று உயர்ந்த இடங்களில் அரசுப் பணியில் இருக்கும் சிவகங்கை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முருகன், நெடுஞ்சாலைப் பொறியாளர் சுந்தராசு, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் முதல்வர் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் பவானியா ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

விழாவின் அமைச்சரை வரவேற்றுப் பேசிய மாணவி ஒருவர், “அமைச்சரய்யா உங்கள் உதவியால் இன்று நாங்கள் நன்றாக படிக்கிறோம். இப்ப நீங்க வருவீங்களோ வரமாட்டீங்களோனு நினைச்சோம். நாங்க படிக்கிற கட்டடத்தைப் பாருங்க மழையில் ஒழுகுகிறது. ஏழைப் பிள்ளைகள் படிக்க ஒரு புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தாங்கய்யா..” என்றார்.
உடனே மாணவிக்கு பொன்னாடையை அணிவித்து பாராட்டிய அமைச்சர் மெய்யநாதன், “இந்தப் பள்ளி எப்படி இருந்து இப்படி உயர்ந்துள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன். பெற்றோர்களின் பங்கும் உழைப்பும் தான் இன்று சிறந்த பள்ளிக்கான விருது பெற வைத்துள்ளது. அதனால் பெற்றோர்களை பாராட்டுகிறேன். இந்தப் பள்ளி ஒரு நாள் உலக அரங்கில் பேசப்படும். அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப் போறேன், பள்ளி மாணவி பேசும் போது ஏழைப்பிள்ளைகள் படிக்க ஒரு கட்டடம் வேண்டும் என்றார் இப்போது சொல்கிறேன் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் விரைவில் கட்டப்படும். ஒரு வாரத்தில் அடிக்கல் நாட்டுவோம்” என்று சொன்ன போது அரங்கமே அதிர கைதட்டல்கள் வெளிப்பட்டது.

தொடர்ந்து பேசும் போது, “இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் இருமொழிக் கொள்கையில் படித்து உயர்ந்தவர்கள். இந்த மேடையில் இருந்த டிஎஸ்பி பவானியா, பேருந்து வசதியே இல்லாத செட்டியாபட்டி கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளிகளில், கல்லூரியில் படித்து வீட்டில் இருந்தே கிடைத்த புத்தகங்களை படித்து குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று டிஎஸ்பி ஆகி இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கல்வி. 89% கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை புகுத்தி 3ம் வகுப்பில் பொதுத் தேர்வை நடத்தி கல்வியை சீரழிக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அதனால் கல்வி நிதியை தர மறுக்கிறது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் முழுமையாக எதிர்க்கிறார். நம் பிள்ளைகளின் படிப்பை உயர்த்த நலத்திட்டங்களை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு” என்றார். மேடையில் மாணவி வைத்த கோரிக்கைக்கு உடனே நிறைவேற்றிய அமைச்சரை பொதுமக்கள் பாராட்டிச் சென்றனர்.