அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகன், அவர் மூலமாகவே திமுகவில் உயர்ந்த பொறுப்பான தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதவியைப் பெற்றவர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், தன் தம்பியைச் சுட்ட வழக்கு, மற்றொருவரைக் கொலைசெய்த வழக்கு ஆகியவை அவர்மீது நிலுவையில் இருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் இறந்துபோனவரின் தம்பி, தன் அண்ணனின் கொலைக்குப் பழியாக பில்லாவை கொல்ல அவரை வேவு பார்த்திருக்கிறார்.
இத்தகவல் பில்லா ஜெகனுக்கும் போக, அவரும் அந்த நபரைப் பின்தொடர்ந்திருக்கிறார். அந்த நபரின் வீடு, தூத்துக்குடி பீச் ரோட்டிலிருக்கும் பழைய சர்க்யூட் ஹவுசின் பின்புறமிருப்பதையும், சுற்றுலா மாளிகையின் மாடியிலிருந்து அவரது வீட்டையும் அவரையும் கண்காணிக்கலாம் என்றும் திட்டமிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் சகாக்கள் சிலருடன் பீச் ரோடு பழைய சுற்றுலா மாளிகைக்குப் போன பில்லா, சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளர் சதாம் சேட்டிடம் தங்குவதற்காக ரூம் கேட்டிருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் ஒருநபர் விசாரணை கமிஷனான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் இந்த மாளிகையில் செயல்படுவதால், இங்கே தனிநபருக்கு அனுமதியோ, தங்குவதற்கு அறை ஒதுக்கப்படும் வழக்கமோ கிடையாது என்று சொல்லியிருக்கிறார் சுற்றுலா மாளிகையின் பொறுப்பாளரான சதாம் சேட்.
இதனால் ஆத்திரமான பில்லா, அவரிடம் ரூம் கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், தாக்கவும் செய்திருக்கிறார். இதுகுறித்து பொறுப்பாளர் சதாம் சேட், தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.
பில்லா ஜெகன் மீதான புகாரைப் பெற்ற போலீஸ் அதிகாரி, பிரச்சனையை சமாதானமாகப் பேசி முடித்துவிடலாம் என்ற திட்டத்தில் இருப்பதை அறிந்த விசாரணை கமிஷன் பணியாளர் சதாம் சேட், தன் புகாருக்கு நடவடிக்கை இருக்காது என்பதையறிந்ததும் நடந்ததை அப்படியே விசாரணை கமிஷன் நீதிபதியான அருணா ஜெகதீசனிடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து அருணா ஜெகதீசன், இந்த விஷயத்தை டி.ஜி.பி.யிடம் தெரிவிக்க, முதல்வரின் கவனத்திற்குப் போயிருக்கிறது.
பிறகென்ன, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பில்லா ஜெகன் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்திருக்கிறார்கள். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறார் திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “பில்லா ஜெகனை ஃபாலோ செய்த நபரை வரவழைத்து எச்சரிக்கை செய்திருக்கிறோம். தாக்குதல் தொடர்பாக பில்லா ஜெகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.
பில்லா ஜெகனின் இந்த விவகாரம் உப்பு நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.