Skip to main content

ஸ்ரீமதி தாயாருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதியின் தாயாரை அவரது இல்லத்தில் இன்று (11/08/2022) தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவியின் தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நேரில் சந்தித்தது குறித்து அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

 

மாணவி ஸ்ரீமதி மரணத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அதுதான் மாணவிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்; மாணவியின் பெற்றோர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டேன்.மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் தனது ஆறுதலைத் தெரிவித்து ‘தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்...’ என்றார். 


ஸ்ரீமதியின் இறப்பில் ஏற்பட்ட மர்மத்தினைத் தொடர்ந்து நடந்த உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர நக்கீரன் முழுமூச்சாய் முனைப்பு காட்டி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை நக்கீரனை தொடர்பு கொண்டு ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்து நன்றி கூறினார்.


 

சார்ந்த செய்திகள்