கரூர் அருகே இரண்டு மினி சரக்கு வாகனங்கள் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோர் மினி சரக்கு வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கக்கூடிய குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்துள்ள காட்டுமுன்னூர் என்ற பகுதியில் மினி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிரே தார் டின்களை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு மினி சரக்கு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு சரக்கு வாகனங்களிலும் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தென்னிமலை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.