Skip to main content

குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை செய்யப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மெல்ல நின்று கொல்லும் உயிர்க் கொல்லி நோயாக மாறி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தியாவில் அதன் பாதிப்புகளைக் குறைத்திடும் வண்ணம் மத்திய அரசு நேற்று முதல் (25.03.2020) 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளதை அனைவரும் நன்கறிவோம்.

 

Association Announcement


 

மக்கள் கூட்டம், கூட்டமாகக் கூடாமல் சமூக பரவலைத் தடுத்து, ஒவ்வொருவரும் தனித்திருப்பது ஒன்றே கொரானா வைரஸ் தொற்றை முற்றிலுமாக தடுக்கும், அதுவே பொதுமக்களைப் பாதுகாக்கும் என்கிற நிலையில் மத்திய, மாநில அரசுகள் 144தடை உத்தரவு என்கிற இறுதி முடிவை கையில் எடுத்திருந்தாலும் கூட பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திடும் என அறிவித்துள்ளது.
 

ஆனால் மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் பொதுவெளிகளில் கூட்டம், கூட்டமாகக் கடைகளுக்குச் செல்வது, சாலைகளில் பயணிப்பது என கொரானா வைரஸ் தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனர்.

 

மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தள ஊடகங்கள் பலவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கூட அவற்றையெல்லாம் பொதுமக்கள் அவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அஜாக்கிரதையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
 

பொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும், வருமானம் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து கடைகளைத் திறந்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகப் பெருமக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
 

எனவே தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என எங்களது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

மேலும் பால் தட்டுப்பாடு எனக் கூறி வணிகர்கள் எனும் போர்வையில் ஒரு சில சமூக விரோதிகள் 1லிட்டர் பாலினை  100.00ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகத் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அலைபேசி :-9600131725 கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்